வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலத்தில் வட்டார வளவில் அரசுப் பள்ளிகளிடையே கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது. இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வட்டார அளவிலான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 51 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர் பங்கேற்றனர். கவின்கலை, நுண்கலை ,மொழித்திறன் சார்ந்த ஓவியம், வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, பேச்சுப் போட்டி, அழகிய கையெழுத்து, கதை சொல்லுதல், எழுதுதல், நாட்டுப்புறப் பாடல்கள், நாடகம், தெருக்கூத்து, மெல்லிசை என பல தலைப்புகளில் மாணவ,மாணவியர் தங்களது கலைத் திறனை வெளிப்படுத்தினர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜே.ஸ்டேல்லா ஜேனட், நடேசனார் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் காசி.பழநியப்பன் தலைமை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் ராமலிங்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார்,.மோகனசுந்தரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். நடேசனார் பள்ளியில் போட்டிகளை கலையரங்கம் திட்ட பயிற்றுநர் அம்பிகாபதி தொடங்கி வைத்ததர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.