நன்றி குங்குமம் ஆன்மிகம் வேதத்திலே, `புருஷ ஸூக்தம்’ என்றொரு ஸூக்தம் உண்டு. அந்த புருஷ ஸூக்தமே, வேதம் அனைத்திற்கும் சாரமாக விளங்குகிறது. அனைத்திற்கும் மூலமாக விளங்கும் பரப் பிரம்மத்தை பற்றி விளக்கும் ஸூக்தம் இது. இந்த ஸூக்தத்தில் ஒரு கூற்று உள்ளது. ‘‘இந்த பரப் பிரம்மாவானது ஆண், பெண் என்ற பேதங்கள் பார்ப்பதில்லை. இது அனைத்தையும் கடந்து உடல், `தான்’ அல்ல என்று இருக்கிறது’’ என்பதாகும். இந்த புருஷ சூக்தமானது, எதற்கு இந்த பெயரைக் கொண்டுள்ளது? நான்கு வேதங்களும் ஒவ்வொரு ஏணிப்படியைப் போல, எதன்படி நடந்தாலும் அது நம்மை பரப்பிரம்மதிடமே கொண்டு சேர்க்கிறது. இந்த நான்கு வேதங்களில் எந்த வேதத்தையும் பயில முடியாதவர்கள், இந்த புருஷ சூக்தத்தை பயில வேண்டும். ஏனென்றால் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்தும் (பரம புருஷனைப்பற்றி) இந்த சூக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஆகையால், இது வேதத்தின் சாரமாகவும் கருதப்படுகிறது.மேலே கூறப்பட்ட கூற்றுப்படி, அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் உறைகிறான் எனில், ஏன் ஆண்கள் மட்டும் வேதம் பயில வேண்டும்? பெண்கள் பயிலக் கூடாதா? என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள். ஆண்கள் மட்டும்தான் வேதம் பயில வேண்டும் என்பது போன்ற ஒன்று இல்லவே இல்லை. அதற்கு உதாரணங்களும் இருக்கின்றன அவற்றை காண்போம்.வேதகாலத்தில் பெண்கள்வேதகாலத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராகவே பார்க்கப்பட்டனர். எப்படி ஆண்கள் வேதம் பயின்றார்களோ, அப்படி பெண்களும் வேதம் பயின்றார்கள். அதற்கான சான்றுகள் இன்றளவும் நிறைய உள்ளது. வேதத்தில் பெண்களின் பங்கானது மிக மகத்தானதாகும். இதில் நிறைய ரிஷி மனைவிகளும் பங்குபெற்றுள்ளனர். வேதத்தை பெண்கள் ஒதக்கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை. பெண்களுக்கு வேதம் பயிலக்கூடிய அத்தனை தகுதிகளும் உண்டு. வேதத்திலேயே பெண்களைப் பற்றி மிக உயர்வாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களில் சில பகுதிகள் பெண்களாலும் இயற்றப்பட்டுள்ளது. வேத காலத்திலே பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேதமானது, நிறைய ரிஷிகைகளை அதாவது பெண் ரிஷிகளையும், நெறியோடு வாழ்ந்த பெண்களையும் கொண்டாடுகிறது. அவர்களைப் பற்றி நிறைய பேசுகிறதும்கூட. பெண்கள் வேதம் பயிலக்கூடாது என்பது ஒரு தேவையற்ற கூற்றாகவே இருக்கிறது.பொதுவாக, வாழ்வில் நாம் செய்யும் அத்தனை சம்ஸ்காரங்களிலும் சாஸ்திரப்படியான, மரபின் படியான விஷயங்களில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவள் சரியென்று சொன்னாலொழிய அதைத் தொடர முடியாது. மறையில், பெண் தெய்வ வழிபாட்டை மிக முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளது. அவளிலிருந்தே அனைவரும், அனைத்தும் உருவாகின என்று வேதம் உறுதிப்படுத்துகிறது. விஷ்ணு, பிரம்மா, சிவன் முதற்கொண்டு பரசு ராமர் வரை அத்தனை தேவர்களும், ரிஷிகளும், முனிகளும் அம்பிகையை வழிபட்டுள்ளனர். ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண் தெய்வங்களையே அதிகம் உயர்த்தி பேசுகின்றன. வேதங்கள் என்பதே ஆகாயம் எங்கும் திரிந்த பிரபஞ்ச ரகசியங்களை, ரிஷிகள் நமக்கு அளித்தவையே. ரிக், யஜுர், அதர்வண ஆகிய மூன்று வேதங்களிலும் ரிஷிபத்தினிகளால், `தான்’ என்கிற நிலை இல்லாது தன்னைத் தானே தெரிந்துகொண்டு, மிகப் பெரிய நிலையில் இருந்து அம்பிகைகளாக தன்னை உணர்ந்து, பிரபஞ்சத்தில் திரிந்த ரகசியங்களை நமக்கு உபதேசமாக வழங்கினர். அவைகளே பின்னர் வேதத்தில் இணைக்கப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. அப்படி யிருக்க, பெண்களை வேதம் ஒதக்கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? லோபா முத்திரையானவள், குறுமுனியாகிய அகத்தியரின் மனைவியாவார். அவள் இயற்றிய சூக்தங்களே இன்று ரிக்வேதத்தில் காணப்படுகின்றன. அவள் மட்டும் இன்றி, காஷ்யபரின் மனைவியான அதிதி மற்றும் சில பெண் ரிஷிகளான, இந்திராணி தேவி, ஊர்வசி, கோதா, என பலரும் இயற்றியிருக்கிறார். மைத்ரேயி தேவியின் உபதேசமானது, பிருஹதாரண்யக உபநிடத்தில் உள்ளது. மைத்ரேயி தேவியானவர், யாக்ஞவல்கியர் என்ற மகரிஷியின் பத்தினியாவார். இவர், தானே விரும்பி தன் கணவனிடத்தே வேதசாஸ்திரம் கற்று உயர்ந்த நிலையை அடைந்தார். இவர், வேதம் கற்க விரும்பும் பெண்களுக்கு ஆசிரியையாக விளங்கினார். இவரைப் பற்றி பல நூல்கள் கூறுகின்றன.மகாபாரதத்தில் பாண்டவர்கள், திரௌபதியுடன் வனவாசம் செல்லும் பொழுது, மூத்தவரான யுதிஷ்டிரர், பிரஹதாரண்யகம் கற்கும் பொருட்டுதான் யக்ஞவல்கியரிடமும், மனைவியான திரௌபதியை மைத்ரேயி தேவியிடமும் அனுப்புகிறார். திரௌபதிக்கு மைத்ரேயி தேவியே, ஆசிரியை ஆவார். இத்தனையும் பெண்களின் வெற்றியையே கூறுகிறது. வேத காலத்திற்கு பின்னும், பெண்களுக்கு வேதம் ஓதும் உரிமையும், சந்தியா காலத்தில் செய்யும் சடங்குகளையும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் வால்மீகி ராமாயணம் நமக்குத் தெளிவைக் கொடுக்கிறது. ராமரின் காலகட்டத்தில் வேதத்தின் நிலைமை, அது எப்படி செழித்தோங்கியது என்று தெரியவருகிறது. சுந்தர காண்டத்திலே அதன் முழுப் பகுதியும், அனுமனை பற்றியும் அவன் சீதையைத் தேடிச் சென்றதும், அன்னையை பார்த்து மீண்டும் வந்து ராமனிடம் சீதையின் இருப்பிடம் பற்றிய தகவலை சேர்க்குமிடத்தே இருக்கும். சுந்தரகாண்டத்தில் 14-வது சர்கத்தில், 49-வது சுலோகத்திலே சீதையானவள் சந்தியாகால சடங்கை விரும்புபவளாக, அவள் நிச்சயம் இங்கே வருவாள் என அனுமன் தீர்மானிக்கிறான்.சந்த்யா கால: மனா: ஷ்யாமாத்ருவம்ஏஷ்யதி ஜானகிநதீம் ச இமான் சிவ ஜலாத் சந்த்யாஅர்த்தே வர வர்னினீஇதன் பொருளானது; மிகவும் இளமனதுடைய ஜானகியானவள், சந்தியா கால சடங்கில் மிகவும் பிரியமுள்ளவளுமான ஜானகி, நிச்சயம் இந்த நதிக்கரையிலே தன் கடமையைச் செய்ய வருவாள் என்று அனுமன் நதிக்கரையைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறான். இராமாயணத்திலேயே இதன் தொடர்புடைய இன்னொரு நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. சந்தியாவந்தனத்தில், மிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது காயத்ரி ஜபத்திற்கே. இந்த காயத்ரி ஜபமானது, இராமனின் காலத்தில்தான் சேர்க்கப்பட்டது. இந்த காயத்ரி மந்திரமானது, விஸ்வாமித்திரரால் கண்டறியப்பட்டதாகும். மன்னனாக இருந்து, அரசைத் துறந்த விஸ்வாமித்திரர், தவம் மேற்கொண்டு தனக்குள் ஆழ்ந்தார். அப்போது, அவர் தன் ஆத்மாவை கண்டுகொண்டார். அப்போதும், அவர் தேவரிஷியென்றே அறியப்பட்டார். மீண்டும் அந்த ஆத்மாவையே பார்த்துக் கிடந்தவர், அந்த ஆத்மாவுக்கே வெளிச்சத்தை அளிக்கக்கூடிய சக்தியை கண்டு கொண்டார். அந்த சக்தியானது தேவி ரூபம் கொண்டிருந்தது. அவள் பெயர்தான் காயத்ரி. அந்த காயத்ரி தேவியையும் அறிந்து அவளது மந்திரமான காயத்ரி மந்திரத்தைப் பெற்றார். இதற்கு முன்பே பிரம்ம ரிஷியாக இருந்த வசிஷ்டர், அவரின் தவத்தைக் கண்டு மெச்சி விஸ்வாமித்திரரை பிரம்மரிஷியென அறிவித்தார். விஸ்வாமித்திரரும், பிரம்மரிஷியென்றே அறியப்பட்டார்.மன்னன் தசரதரிடம் வந்த விஸ்வாமித்திரர், ராமனை அழைத்து செல்வதும், அவர் தவத்தை ராமர் காத்தமைக்கும், அவரைப் பாராட்டி அவருக்கு பல மந்திரங்களை உபதேசம் செய்தார். அப்போது, ராமன் சந்தியாவந்தனம் செய்வதை ரிஷி நோக்குவாத ஒரு சுலோகம் கூறு கிறது. இது பால காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.தஸ்ய ருஷி: பரம் உதாரம் வச: ஷ்ருத்வாந்ருப நரோத்தடுமளஸ்னாத்வா க்ருத உதகௌ வீரௌ ஜேபதி:பரமம் ஜபம்இதற்கு பொருள்: ரிஷிகளில் மிக உயர்ந்த வரான விஸ்வாமித்திரர் கூறியவுடன், மனிதர்களில் மிகவும் உத்தமமான ராமனானவன், எழுந்து தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு மிக உயர்ந்த மந்திரமான காயத்ரியை ஜபம் செய்தான். இவைகள் மட்டுமல்ல வேதத்தின் அதிபதியாகி, பிரம்மனின் மனைவி சரஸ்வதி தேவியும், சதாகாலமும் வேதம் ஓதுபவள்தான். அவளும் நாம் வழிபடும் பெண் தெய்வம்தான். அவள் எப்போதும் தன் கையில் வீணையுடனும், மறுகையில் வேதத்துடனும்தான் நமக்கு காட்சி கொடுக்கிறாள். வேதத்தில் ரிஷிகளும், தேவர்களும் சரஸ்வதியை கொண்டாடுகின்றனர். சரஸ்வதி தேவியானவர், தன்னுடன் பிறந்த சிவனிடத்தில் அமர்ந்து வேதமும் ஞானமும் பெற்றாள். ஆகையால், பெண்கள் வேதம் பயில்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது என் கருத்து.இந்த விஷயத்தை மறுப்பதற்காக சிலர், பெண்களின் உடல் வேதத்தின் அக்னியை தாங்க முடியாது என்றெல்லாம் கூறுவார்கள். அவை அனைத்தும் காலத்தாலும் மனிதர்களாலும் தானாகவே உருவான ஒரு கட்டுக் கதையே. இதை மறுக்க சிலரோ சாஸ்திரங்களின் மேலும், மஹான்களின் மேலும் பழிபோட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வேதத்தையே நாம் `வேதமாதா’ என்றுதான் அழைக்கிறோம். அப்படி இருக்க பெண்களை வேதம் பயிலக்கூடாது என்பது சரியானதாகப்படவில்லை. அந்த காலத்திலேயே மகளிர் பல வேதாந்த சபைகளில் அமர்ந்து வாதிட்டும், விவாதித்தும் பலமுறை பங்குபெற்றும், பலபேரை வென்றும் இருக்கிறார்கள்.ஒருமுறை, ஸ்ரீமஹாபெரியவா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம், இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, மஹான் சூசகமாக பதிலளித்தார். ஆனால், அவர் அந்த பதிலில் பெண்களுக்கு உரிமை இல்லை என்றெல்லாம் கூறவில்லை. வேதத்தை வளர்க்க இத்தனை பேர் இருக்கும்போதிலும், வேதத்திலேயே தனி சாஸ்திரமாக, ஐந்தாம் வேதமாக சொல்லப்பட்டிருக்கும் புராணம், நர்த்தனம், இசை முதலியவற்றை பெண்கள் கற்கலாம் என்றும், அவற்றையும் அழிந்துவரச் செய்யாது, பாதுகாத்துவரவே அப்படி சொல்லி வைத்திருக்கிறது என்று சொன்னார். அதனால், பெண்கள் வேதம் சொல்வதில் எந்த தவறும் இல்லை. வேதத்தை ஓதிக்கொண்டிருப்பதால் அனைவருக்கும் நடுவேயுள்ள பேதம் அகன்று, அறுந்து போகும். வேதம் என்னும் அமிர்தத்தை அனைவரும் அனுபவிக்கலாகும்.தொகுப்பு: ஹரிஷ் ராம்குமார்…