ஆரணி, செப்.9: சேவூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் பெண்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் ராதா ருக்மணி சமேத வேணு கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் பெண்கள் நேற்று விரதமிருந்து தங்கள் வீடுகளில் இருந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்து மேளதாளம் முழங்க சேவூரில் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ராதா ருக்மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறி அதில் வைக்கப்பட்டிருந்த பொற்காசுகள் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து வெற்றிபெற்றனர். இதனை தொடர்ந்து, இரவு வேணுகோபாலகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், இன்று உறியடித்திருவிழாவும், புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா, நாளை ஊரணி பொங்கல் வைத்தல், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.