கோபி, ஜூலை 5: கோபி அருகே உள்ள வேட்டைகாரன் கோயில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. கோபி அருகே உள்ள வேட்டைகாரன் கோயில் வாய்க்கால்மேட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இரவு நேரங்களில் கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பைகளை மர்ம நபர்கள் வீசி செல்கின்றனர். இதனால், வாய்க்கால் அசுத்தமாவதுடன் பாசனத்திற்கு பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இதனால், வாய்க்காலில் குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்கால் கரையில் சோலார் மூலமாக மின் இணைப்பு பெற்று 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நவீன கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காமிரா பதிவுகள் முழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் வாய்க்காலில் கோழி கழிவுகள் குப்பைகள் கொட்டும் நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.