குன்னூர், ஜூன் 28: குன்னூர் மவுண்ட்ரோடு சாலையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் உள்ள மவுண்ட் ரோடு சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் இளைஞர்கள் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விதிகளை மீறும் வாகனங்களை பிடித்து அபாராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.,வுக்கும், நகராட்சி அலுவலகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அதிவேகமாக பைக்கில் இளைஞர்கள் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஒன்று வலது புறமாக திரும்ப முற்படும் போது சிக்னல் செய்து ஓட்டுநர் ஆட்டோவை திருப்பினார்.
இதனை அறிந்தும் ஆட்டோவை முந்த இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.
அப்போது சாலையில் நிலைதடுமாறி ஆட்டோ மீது உரசி, தரையிலேயே இருசக்கர வாகனம் இழுத்துச்சென்று அங்குள்ள இரும்பு தடுப்பில் மோதியது. இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவருமே காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை கண்ட பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.