திருச்செங்கோடு, ஜூன் 27: எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் சாலையில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் சரக்கு வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளியின் முன்பு வேகத்தடை அமைத்தனர். இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள, இரவில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் அமைக்கப்பட்டது. அதிகப்படியான வாகனங்கள், தொடர்ந்து செல்வதால், ரிப்ளக்டர் விளக்குகள் நொறுங்கி சேதமாகி விட்டது.
இதனால் இருசக்கர வாகனத்தில் வருவோருக்கு, சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல், சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, வேகத்தடையில் புதிதாக ரிக்ளக்டர்களை பொருத்த வேண்டும் என திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை வருவாய் ஆய்வாளர் கந்தசாமியிடம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், தங்கராஜ் ஆகியோர் மனு வழங்கினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.