கரூர், ஆக. 20: கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த குளித்தலையை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தனிப்படையினரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12ம்தேதி, புலியூரைச் சேர்ந்த முத்தாயி(57) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, டிஎஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிவேல் (37) என்பவர் தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பைக் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.