கோவை, மே 27: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 5-வது, 6-வது மற்றும் 7-வது மலைகளில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை காலநிலை மாறி வருகிறது. அங்கு அசாதாரண காலநிலை நிலவி வரும் நிலையில், வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
மேலும், மலையேற்றத்தில் ஈடுபட்ட காரைக்கால் சேர்ந்த கவுசல்யா(45), திருவண்ணாமலையை சேர்ந்த செல்வகுமார்(32) என இருவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். வெள்ளியங்கிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அவர்களது உடலை மலையில் இருந்து கீழே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், நேற்று வனத்துறையினர் டோலி தூக்கும் பணியாளர்கள் உதவியின் மூலம் அவர்களின் உடலை கீழே கொண்டுவந்தனர். இதற்கிடையில், வெள்ளியங்கிரி மலையேறிய 7 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில்,“பூண்டி அடிவாரத்தில் மலையேறும் பாதைக்கான கேட் அடைக்கப்பட்டு உள்ளது.
இந்த கேட் அடைப்பதற்கு முன்பு மலையேறிய பக்தர்கள் மீண்டும் கீழே மெதுவாக இறங்கி கொண்டு இருக்கின்றனர். மலையில் யாரும் சிக்கவில்லை. அது தவறான தகவல். தொடர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட பக்தர்கள் குறித்து கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது, மேலும், உயிரிழந்த இருவரது உடல்களும் கீழே கொண்டு வரப்பட்டது” என்றனர்.