அந்தியூர்,அக்.7; ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரிப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை துவக்க வைக்க வந்த எம்எல்ஏ அந்தியூர் வெங்கடாசலத்திடம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர், அந்த மனுவில், ‘‘வெள்ளிதிருப்பூர் மின் பகிர்மான பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக மும்முனை மற்றும் இருமுனை என மாற்றி மாற்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொல்லபாளையம், பச்சாம்பாளையம், கூச்சிக்கல்லூர், மறவன்குட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நீரைப் பயிர்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே தொடர்ச்சியாக எப்பொழுதும் போல அப்பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ வெங்கடாசலம் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.