ஈரோடு,ஆக.19: ஈரோட்டில், வரும் 21, 22ம் தேதிகளில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, கால் நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத் தலைவர் பேராசிரியர் யசோதை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லூரி அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 21, 22ம் தேதிகளில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதில், 21ம் தேதியன்று விரிவான பாடங்கள் நடத்தி, கலந்துரையாடல்,வீடியோ படக்காட்சி, கேள்வி-பதில் பகுதியும், 22ம் தேதி அருகே உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறியாடு பண்ணைக்கு அழைத்துச் சென்று களப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. எனவே, ஈரோடு மற்றும் அதன் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய பண்ணையாளர்கள், மகளிர் குழுவினர் இப்பயிற்சியில் பங்கேற்றுப் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424 2291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.