அம்பை அக்.21: அம்பாசமுத்திரம் வட்டார கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கான விவசாயிகள் பயிற்சி வெள்ளங்குளி ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை வகித்தார். வெள்ளங்குளி ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், துணைத்தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தலைவர் சரவணன் நெற்பயிரில் கடைபிடிக்க வேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் குணாதிசயங்கள் குறித்து எடுத்துக்கூறினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு குறித்தும் கிசான் கடன் அட்டை பெறும் வழிகள் குறித்தும் எடுத்துரைத்தார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஈழவேணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சுற்று வட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பால சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.