ராமநாதபுரம், நவ. 18: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம், கீழமுந்தல் பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி அதிக குதிரைத்திறன் கொண்ட தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கின்றன. இந்த படகுகள், அப்பகுதி கரைவலை, தோணி, நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை தொடர்ந்து அறுத்துவிட்டுச் செல்வதால் சிறுதொழில் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும், தொடர்ந்து புகார் அளித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காதில் பூச்சூடி, அறுத்து நாசம் செய்யப்பட்ட வலைகளுடன் வாலிநோக்கம், கீழமுந்தல் மீனவர்கள், கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் நேற்று வந்து ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதியிடம் மனு அளித்தனர்.