சிவகங்கை, நவ.22: சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் ரேசன் கார்டு இல்லாத புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் புதிய ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில், வெளி மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் ரேசன் கார்டு இல்லாதவர்கள், புதிய ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து தொடர்புடைய குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
அதன், அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக, சம்மந்தப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நிரந்தரமாக தங்கியுள்ளவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்திற்கு தற்காலிமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் ரேசன் கார்டு இல்லாதவர்கள் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்த விண்ணப்பித்தினை வட்ட வழங்கல் அலுவலகங்களில் அளிக்கவும்.
அவ்வாறு பெற்ற மனுவினை அவர்களது சொந்த மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ரேசன் கார்டு பெற்றவர்கள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் அனைத்து ரேசன் கடையிலும் பொருள்களைப் பெற்று பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் eShram Portal என்ற இணையத்தள தரவு தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.