வேலூர், ஏப்.14: கோடை விடுமுறையில் வீட்டை பூட்டுவிட்டு வெளியூர் மற்றும் சுற்றுலா செல்லும் நபர்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது பிளஸ்2, பிளஸ்1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இன்னும் ஒரிரு வாரங்களில் அனைத்து வகுப்புகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. விடுமுறையால் குழந்தைகளை வெளியூர் சுற்றுலா, அல்லது உறவினர் வீடுகளுக்கு பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். வெளியூர்களில் பணிபுரியும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளனர்.
இச்சூழ்நிலையில் நீண்ட நாட்கள் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் திருட்டு கும்பல் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றது. வீடுகளில் புகுந்து பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தை திருடி சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க அருகில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது கோடை விடுமுறையால் வெளியூர்களுக்கும், சுற்றுலாவுக்கும் விசேஷங்களுக்காக செல்ல தொடங்கி உள்ளனர். இதை பயன்படுத்தி திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வெளியூர் செல்வதற்கு முன்பாக தங்களின் வீட்டிற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
போலீசார் உடனடியாக ஸ்மார்ட் காவலர் செயலில் இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்குவார்கள். போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியாக விளங்கும் இன்ஸ்பெக்டர் அல்லது சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் கண்காணித்து போலீசாருக்கு அவ்வபோது தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். எனவே பொதுமக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவ்விடங்கள் பற்றிய விபரங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு உறுதிபடுத்தப்பட்டும். மேலும் தினந்தோறும் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டு குற்றம் நடைபெறமால் பாதுகாக்கப்படும். மேலும் வெளியூர் செல்பவர்கள் வீடுகளில் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்ல வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் வெளியூர் செல்லும் தகவலை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. வீட்டில் நகைகளோ அல்லது பணமோ வைத்திருப்பது தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.