சிவகங்கை, ஜூலை 2: வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், தமிழ்நாடு அரசு அல்லது இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பாதிக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
இனிவரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளை வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.