சிவகங்கை, செப்.2: கல்லல் அருகே வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 184 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். வெற்றியூர், கருங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவ,மாணவிகள் வந்து படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், இவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27லட்சம் மதிப்பில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கி கொடுத்தனர்.
மேலும் பஸ்சை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷாஅஜித் கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.