சேந்தமங்கலம், மே 30: எருமப்பட்டி அருகே, பட்டிக்குள் புகுந்து 7 ஆடுகளை கடித்துக் கொன்ற வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எருமப்பட்டி ஒன்றியம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (55), விவசாயி. இவர் 60க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, மாலை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விடுவார். நேற்று முன்தினம், வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மாலை பழைய செக்கு மரம் என்ற இடத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்தனர். உடனடியாக ரங்கராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து உள்ளே சென்று பார்த்த போது 7 ஆடுகள் வெறி நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவ குழுவினர் நாய்கள் கடித்த ஆடுகளை பார்வையிட்டு கணக்கெடுத்து விட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.