கோவை, ஆக. 27: கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு இருந்த வெயில் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள 53 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா அறிவுறுத்தலின் பேரில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதனை அந்தந்தந சுகாதார அலுவலக டாக்டர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறுகையில்,“காலநிலை மாற்றத்தினால் அதிகளவிலான வெயிலின் தாக்கம் இருந்தது. இதனை தவிர்க்கவும், சுகாதார நிலையங்களை பசுமையாக மாற்றவும் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 53 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நடவு செய்த பணியாளர்கள் பராமரிக்க உள்ளனர்’’ என்றார்.