ஆண்டிபட்டி, ஆக. 5: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வைகை அணை பூங்கா பகுதி சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து வெயில் அதிகரித்தே இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர். பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதால் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் கடைகள் உள்ளிட்ட கடைகளில் போதிய வியாபாரம் இல்லாமல் உள்ளன. மேலும் வெயிலின் தாக்கம் குறையும் வரை இதே நிலை நீடிக்கும் என்றும் தெரிகிறது.