தொண்டி, ஆக.31: தொண்டி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சில மீனவர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓரியூர் பேருந்துநிலையம் அருகே தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த செந்தில் என்ற மீனவர், கடந்த 4 தினங்களுக்கு முன்னர் ஜெலட்டின், டெட்டனேட்டர், திரி மற்றும் வயர் உள்ளிட்டவற்றை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது வெடி பொருட்கள் அடங்கிய பை சாலையில் தவறி விழுந்து சிதறியுள்ளது.
மீண்டும் அதை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் வந்தபோது, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த பையை எடுத்து சோதனை செய்து கொண்டிருப்பதை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். போலீசார் பையை சோதனையிட்டதில், 400 ஜெலட்டின் குச்சிகள், 400 டெட்டனேட்டர்கள், 2 கிலோ திரி மற்றும் மூன்று கிலோ ஒயர் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த எஸ்பி பட்டினம் போலீசார், அதனை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்த வெடி பொருட்கள் அனைத்தும் கடலில் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்துவதற்காக வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.