பேரணாம்பட்டு, ஜூலை 7: பேரணாம்பட்டு அருகே வெடிமருந்துகளை கலக்கியபோது தீப்பிடித்து விவசாயி படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தை சேர்ந்தவர் அருள்(38). வனப்பகுதியையொட்டி உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறதாம். இதனால் அருள், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளுக்கு வைக்க நேற்றுமுன்தினம் விவசாய நிலத்தில் பட்டாசுகளில் இருந்த மருந்துகளையும், சில வெடி மருந்துகளையும் சேர்த்து கலக்கி கொண்டிருந்தாராம். அப்போது திடீரென தீப்பிடித்துள்ளது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.