கரூர், செப்.15: கரூர் வெங்கமேடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் பாரதி(27). இவர், நேற்று முன்தினம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் வந்த இதே பகுதியை சோந்த தர்மா(23), பாரதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300ஐ பறிக்க முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார், பாரதியின் புகாரின் அடிப்படையில், தர்மரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.