சாத்தூர், ஜூலை 3: சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெரும் திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெங்கடாசலபதி உற்சவர் அனுமந்த வாகனம், சேச வாகனம், அன்ன வாகனம், கஜ வாகனம், ஜடாயு, கருட வாகனம், உள்ளிட்ட வாகனத்தில் ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த நிலையில் ஆனி மாத பிரம்மோற்சவ பெரும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. சாத்தூரப்பன் என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், ஜவ்வாது, இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்குபின் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் இலட்சுமணன், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், அறங்காவலர்கள் சுப்புராஜ், முருகேஸ்வரி, பால்பாண்டி, மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாசலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனி பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.