கரூர், ஜூலை 21: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரராக்கியம், மணவாசி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்களை நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறுவதற்கு மொத்தம் உள்ள 583 நியாய விலைக் கடைகளில் 3,38,871 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், முதற்கட்டமாக, 390 நியாய விலைக்கடைகளில் உள்ள 2,29,058 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கொண்டு சென்று, குடும்ப தலைவிகளிடம் நேரிடையாக வழங்குகின்றனர்.
இந்த பணிக்காக விண்ணப்பங்கள் நேற்று துவங்கி வருகிற 23ம்தேதி வரை வழங்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ககும் வகையில் விண்ணப்பங்களுடன் முகாம்களுக்கு வரும் குடும்ப தலைவிகள் அவர்களுக்கு ஒதுக்கிய நாள் மற்றும் நேரத்திற்குள் வர வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.