தேனி, ஜூன் 6: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ரூ.40.48 லட்சம் வசூலானது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இறுதி எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். எட்டு நாள் திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வர்.
இதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி கடந்த 13ம் தேதி வரை நடந்தது. இக்கோயிலில் நிரந்தரமாக 12 உண்டியல்கள் வைக்கப்பட்டிருக்கும். திருவிழா காலத்தில் நிரந்தர உண்டியல்கள் தவிர 22 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. இத்தகைய தற்காலிக உண்டியல்கள் மட்டும் கடந்த மாதம் 26ம் தேதி எண்ணப்பட்டன. அந்த 22 உண்டியல்களில் ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 840 இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கோயில் வளாகத்தில் நிரந்தர 12 உண்டியல்கள் எண்ணும் பணியானது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில், கோயில் செயல்அலுவலர் நாராயணி,
இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்கர் பழனியப்பன் முன்னிலையில் நடந்தது. இப்பணியில் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணிக்கை முடிவில், 12 உண்டியல்களில் ரூ. 40 லட்சத்து 45 ஆயிரத்து 383 இருந்தது. தங்கம் 30 கிராமும், வெள்ளி 702 கிராமும் இருந்தது.