திருப்பூர், நவ.21: திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், பயறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், மரஎண்ணெய் வித்து பயிர்கள், பருத்தி மற்றும் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ், ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பயன்படுத்த, டிராக்டர் இயக்க கூடிய சுழல் கலப்பைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
வெள்ளக்கோவில் வட்டாரம் வீரசோழபுரம் கிராமத்தில் கண்ணம்மாள் என்பவருக்கு சுழல்கலப்பை மானிய விலையில் திட்டத்தின் வழங்கப்பட்டது. இதனை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன், வெள்ளகோவில் வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், துணை வேளாண்மை அலுவலர் விஸ்வநாதன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் லோகநாதன், சுரேஷ் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், விவசாயிகளிடையே பண்ணை கருவிகளின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.