வேலூர், ஆக.19: வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டுமனைகள், வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரங்கள் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்த வீட்டு மனை, வீடுகளுக்கான பத்திரங்கள் வழங்க சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சென்னை செயற்பொறியாளர் மனோகரன் தலைமை தாங்கினார். வேலூர் செயற்பொறியாளர் கணேசன் வரவேற்றார்.
முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் இருந்து வீட்டுமனைகள், வீடுகள் வாங்கி, உரிய பணம் செலுத்தியும் பத்திரங்கள் பெற முடியாமல் இருந்த பலரும் வந்து தங்கள் விண்ணப்பங்களை அளித்தனர். முழுத்தொகை செலுத்தியவர்கள், நிலுவை தொகையை முழுமையாக செலுத்துபவர்கள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நேற்று 5 பேர் வரைவு கிரையப்பத்திரங்களை பெற்றுக்கொண்டனர். இந்த சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.