கண்டாச்சிபுரம், மே 20; கண்டாச்சிபுரம் அருகே 2,500 கிலோ ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புல்லனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் கலா தலைமையிலான குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்டாச்சிபுரம் அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்தில் நேற்று தணிக்கை செய்தனர். அதில் அக்கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரது வீட்டின் பின்புறம் 50 கிலோ எடை கொண்ட அரசு பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம், போலீசார் குறுக்கு விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் தாமோதரன் (28) என்பவர் அத்தியூர் திருக்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலமான புதுச்சேரியில் உள்ள மாவு கடைகளுக்கு அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாமோதரன் வீட்டிலிருந்து சுமார் 50 கிலோ எடையுள்ள 50 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், தாமோதரன் மீது வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.