சேலம், செப்.6: சேலம் அருகே தேவாங்கு குட்டியை பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையில், அதனை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர். சேலம் அருகே பாரப்பட்டி கிராமம் மேச்சேரிபாளையம் என்னுமிடத்தில் ஒரு வீட்டில் தேவாங்கு குட்டியை பிடித்து பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வன ஊழியர்கள், அப்பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜ்(45) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது செல்வராஜ் வீட்டில் இருந்து தப்பியோடினார். தொடர்ந்து வீடு முழுவதும் தீவிரமாக சோதனையிட்டதில் தேவாங்கு குட்டி இருந்தது. அதனை காட்டில் இருந்து பிடித்துச் சென்று வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தேவாங்கு குட்டியை மீட்டு சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தனர். பின்னர், அதனை பிடித்து பதுக்கி வைத்திருந்த செல்வராஜ் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சேலம் கோர்ட் உத்தரவின்பேரில் தேவாங்கு குட்டியை குரும்பப்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர். தப்பியோடிய செல்வராஜை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வீட்டில் பதுக்கிய தேவாங்கு குட்டி மீட்பு
previous post