ஓட்டப்பிடாரம், பிப். 27: ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டியை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி உலகம்மாள்(55). இவர், விவசாய வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 18ம் தேதி வேலைக்கு சென்ற நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 7 பவுன் தங்க நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உலகம்மாள், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டனர். இதில் அவரது எதிர்வீட்டில் உள்ள ஆறுமுகசாமி மனைவி சசிகலா(33) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.