வேலூர், ஜூன் 4: காட்பாடியில் வெல்டிங் தொழிலாளி வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். காட்பாடி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் வினோத்(25). வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அன்று இரவு வீட்டுக்கு வந்து தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் யாரோ சிலர் வினோத்தின் வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடுவது கண்டு வினோத் எழுந்து வந்து பார்த்துள்ளார். கதவை திறக்க முடியவில்லை. அதற்குள் வீட்டின் கதவில் இருந்து தீப்பற்றி எரிந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வினோத்தின் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது வண்டறந்தாங்கல் டெல் குடியிருப்பை சேர்ந்த ஹரீஷ்குமார்(22) என்பது தெரியவந்தது. அவரை நேற்று பிடித்து நடத்திய விசாரணையில் வினோத்துடன் போதையில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹரீஷ்குமாரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது காட்பாடியில்
0