துரைப்பாக்கம், மார்ச் 13: பெருங்குடி அருகே வீட்டின் வாசலில் விளையாடியபோது மழைநீர் கால்வாயில் விழுந்து 3 வயது குழந்தை படுகாயமடைந்தது. சென்னை பெருங்குடி, சீவரம் மாருதி நகர் 2வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் உதயன் (30). இவரது மனைவி மீனா (25). யோகா பிரதிக்ஷா (3) மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சீவரம் மாருதி நகர் உள்ளிட்ட தெருக்களில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அங்கு எந்தவித தடுப்புகளும் அமைக்கப்படாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7.20 மணியளவில் உதயன் வீட்டின் வாசலில், அவரது மகள் யோகா பிரதிக்ஷா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மழைநீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக குழந்தை யோகா பிரதிக்ஷா பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதனை கண்ட, அக்கம் பக்கத்தினர் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த குழந்தையை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.