விக்கிரவாண்டி, ஜூன் 16: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி (50), பாஜக ஒன்றிய தலைவர். கடந்த 2022ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை திருடி சென்றனர். இதுதொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையின்போது பிடிபட்ட நபரின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது முண்டியம்பாக்கத்தில் ரவியின் வீட்டில் திருடிய நபரின் கைரேகை பொருத்தமாக இருந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செந்தில்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம், வழுதரெட்டி காமன் கோயில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ் குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். குற்றவாளி சந்தோஷ்குமார் இதுபோன்று நகைகளை திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வருபவர் எனவும் தெரியவந்தது.