விருத்தாசலம், செப். 6: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் சவுந்தரசோழபுரம் சாலை 2வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் சரவணன்(41). இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திவ்யா தனது குழந்தைகளை நெய்வேலியில் படிக்க வைத்து கொண்டு அங்கேயே தங்கி உள்ளார். எதிர் வீட்டில் சரவணன் தந்தை வசித்து வருவதால், வீட்டை அவர் கவனித்து வந்தார். மேலும் திவ்யா அவ்வப்போது பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து எழுந்து வந்தபோது, எதிரே சரவணன் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் டிராயர் கழன்று வெளியே கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.4 ஆயிரம் காணாமல் போயிருந்தது. தகவல் அறிந்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து ேரகைகளை பதிவு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.