திருவண்ணாமலை, செப்.22: திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் பூட்டு உடைத்து 18 சவரன் நகைகள் மற்றும் 12 கிலோ வெள்ளி நகைளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள செல்வா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(63). தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால், வீடு பூட்டியிருந்தது. அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், மரக்கதவின் பூட்டை உடைத்து சென்று, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 சவரன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஜெயக்குமார் வீட்டு பூட்டு உடைந்து, லேசாக கதவு திறந்து கிடப்பதை பார்த்து, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயக்குமார், தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலைக்கு திரும்பினார். அப்போது, வீட்டில் வைத்திருந்த நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர். மேலும், இதேபோல் கிரிவலப்பாதையில் உளள குபேர நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் என்பவரது வீட்டின் பூட்டு உடைத்து 3 சவரன் நகைளையும், அதே பகுதியில் உள்ள ஆசிரியர் வெங்கடேசன் என்பவரது வீட்டின் பூட்டு உடைத்து ஒன்றரை சவரன் நகைகளையும் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடிச்சென்றுள்ளனர். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருப்பவர்களின் விபரங்களை அறிந்து கொணடு, திட்டமிட்டு இந்த திருட்டுச் சம்பவங்கள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.