கோவை, ஜூலை 5: கோவை பீளமேடு விமான நிலையம் திருநகரை சேர்ந்தவர் சுகுமார் (68). முன்னாள் அரசு இன்ஜினியர். இவரது மகன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுகுமார் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத் சென்றார். கடந்த 1ம் தேதி சுகுமாரின் வீட்டு காவலாளி வீட்டை சுற்றி வந்தார். அப்போது, பாத்ரூம் ஜன்னல் கதவுகள் கழற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவலாளி ஐதராபாத்தில் உள்ள சுகுமாருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர் கோவையில் உள்ள தனது அண்ணன் ஜெகதீஸ் என்பவருக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி தெரிவித்துள்ளார். ஜெகதீஸ் வீட்டிற்கு சென்று பார்த்த போது கொள்ளையன் பாத்ரூம் ஜன்னல் வழியாக புகுந்து அறையில் இருந்த பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து வீட்டின் பின் பக்க கதவு வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.
அதன்பின், சுகுமார் வீடு திரும்பினார். அவர் பீரோவை பார்த்த போது 3 பவுன் தங்க செயின் மற்றும் 2 பவுன் தங்க மோதிரம் என 5 பவுன் தங்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுகுமார் பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர். சுகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.