ரிஷிவந்தியம், ஆக.26: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாவந்தூர் தக்கா கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் ராஜ்குமார் (37). இவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 நபர்கள் வீட்டின் தாழ்ப்பாளை திறக்க முற்பட்டபோது சத்தம் கேட்டு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமார் திருடன் திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்.
சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 நபர்களையும் பிடித்தனர். பின்னர் ரிஷிவந்தியம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன் (36), திருவண்ணாமலை வேடியப்பன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜய் (30) என தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் 2 நபர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.