செங்கல்பட்டு, ஆக.23: செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுவன் மீது லாரி மோதி பள்ளி சிறுவன் பரிதாபமாக பலியானான். லாரி டிரைவரை கைது செய்யக்கோரி, உறவினர்கள் கலெக்டர் இல்லத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சிவகார்த்திகேயன் (10). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்றிரவு, 9 மணியளவில் வீட்டின் அருகே மாணவன் சாலையில் ஓரத்தில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி, சிவகார்த்திகேயன் மீது மோதியது. இதில், தலையில் பலமாக அடிபட்ட சிவகார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக பலியானான்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் விபத்தில் பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை உண்டாக்கிய லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இந்த நிலையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் உறவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்தி சிறுவன் உயிரிழந்த நிலையில் தப்பி சென்ற லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் கோஷங்களை எழுப்பினர். அதற்கு லாரி ஓட்டுநரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சிறுவனின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட கலெக்டர் இல்ல வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
வேகத்தடை அமைக்ககோரிக்கை
செங்கல்பட்டு பழைய ஜிஎஸ்டி சாலை அனுமந்தபுத்தேரி பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி ஏற்கனவே பலமுறை பல அரசு அலுவலகத்தில் மனு வழங்கப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே, நெடுஞ்சாலை அதிகாரிகள் அல்லது மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.