சேலம், செப்.2: சேலம் மாநகராட்சி பகுதிகளில், கொசு புழு ஒழிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 21வது வார்டில் கொசு புழு கண்டறியப்பட்ட 5 வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகரில் டெங்குத் தடுப்பு நடவடிக்கையாக, கொசு ஒழிப்பு பணியில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வார்டுகளிலும் பழைய டயர்களை அகற்றியும், புகைமருந்து அடித்து வருகின்றனர். மாநகரில் வீடு, கடைகள், வணிக நிறுவனங்களில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, கொசுப்புழு கண்டறியப்பட்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதுவரை 290 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் சூரமங்கலம் மண்டலம், 21வது வார்டு பகுதியில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள், வீடு, வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள உரல்கள், சிரட்டைகள் அகற்றப்பட்டன.
அப்போது 5 வீடுகளில் கொசு புழு கண்டறியப்பட்டது. அந்த வீடுகளுக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்து பழைய டயர்கள், புகை மருந்து அடிக்கப்பட்டது. வீடுகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலத்தில் டெங்கு நோய்த் தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் மீது, பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் உள்ள தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து, தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றனர்.