திண்டிவனம், நவ. 4: திண்டிவனம் அருகே வீடு விற்பனை செய்வதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த செஞ்சி மெயின் ரோடு கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்த வீர பெருமாள் மகன் ஆறுமுகம்(60). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முனுசாமி மகன் வாசுதேவன் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியில், தனது வீட்டை விற்பனை செய்யப்போவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளும்படி ஆறுமுகனிடம் 7 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்திற்கு வீட்டை எழுதி தராமல் இருந்துள்ளார். பின்னர் ஆறுமுகம் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மீண்டும் வாங்கி உள்ளார். இன்று வரை வீட்டையும் எழுதி தராமல், அரசு வேலையும் வாங்கித் தராம 11 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் என்பவர் வாசுதேவனிடம் பலமுறை பணத்தைக் கேட்டும் தராததால், ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வாசுதேவன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.