தர்மபுரி, மே 19: தர்மபுரி அருகே மறுவாழ்வு மையத்தில் இருந்து வீடு திரும்பிய வாலிபர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் மகன் பூவரசன்(20). கூலி ெதாழிலாளி. போதைக்கு அடிமையான இவரை, குடும்பத்தினர் மீட்டு தர்மபுரியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, மீண்டும் குடி பழக்கத்திற்கு அடிமையானார்.
தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதில், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பூவரசன் கடந்த 12ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசில் பூவரசனின் தாய் அமுதா புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் மாயம்: தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே வேப்பமரத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சதீஸ்குமார்(28). கூலி தொழிலாளியான இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், சதீஸ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த அவரது மனைவி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. நந்தினி கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சதீஸ்குமார், கடந்த 8ம் தேதி வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் சதீஸ்குமாரின் தாய் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.