செய்துங்கநல்லூர், செப். 2:தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பரில் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது. இதையடுத்து தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சமும், சீரமைப்பதற்கு ரூ.2 லட்சம் மற்றும் சேதத்திற்கு ஏற்றார்போல் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்தன. இதில் 50 வீடுகளுக்கு மட்டும் வீடு கட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வீடுகளுக்கு ஆவணங்கள் சரியில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம் தலைமையில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகள் வழங்க வலியுறுத்தி கருங்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கருங்குளம் யூனியன் பிடிஒ முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மீண்டும் மனுக்கள் வழங்குங்கள். நிச்சயம் வீடு வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.