கள்ளக்குறிச்சி, ஆக. 3: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட நபர்கள் 127 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை முடித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 19ம்தேதி 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 67 பேர் உயிரிழந்தனர். அதில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். மேலும் ஒருவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அதில் இதுவரை 45 குடும்பத்தினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 161 பேரிடம் அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கடந்த மாதம் 7ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். இதில் கடந்த மாதம் 29ம் தேதி வரை 86 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அதனையடுத்து மேலும் 40 பேர் விசாரணைக்கு ஆஜராக வேண்டி கடந்த வாரம் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மூலமாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 30ம்தேதி விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 8 பேர் ஒருநபர் ஆணைய குழு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் முன்னிலையில் ஆஜராகினர். அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து முதலில் விசாரித்துள்ளார். விஷ சாராயம் யாரிடம் எங்கு வாங்கி குடித்தீர்கள் என்ற விபரங்களையும் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கடந்த 31ம்தேதி முதல் நேற்று வரை 124 பேரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார். அடுத்தப்படியாக வருகின்ற 5ம்தேதி முதல் 4 நாட்கள் அடுத்தகட்டமாக விசாரணை நடத்துவதற்கு மேலும் 40 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.