பேரணாம்பட்டு, அக்.6: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டு யானை பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள், பத்தலபல்லி, கோட்டையூர், பாலூர் உள்ளிட்ட பல பகுதிகள் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சாரங்கள் கிராம வனப்பகுதியை ஒட்டி உள்ள பாலகிருஷ்ணன் என்பவரின் நிலத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த அரை ஏக்கர் நெற்பயிர்களை மதித்து நாசம் செய்துள்ளது. அதை தொடர்ந்து பக்கத்தில் உள்ள பாபு என்பவரின் நிலத்தில் புகுந்து 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பின்னர் விவசாயிகள் வயல்களில் வேளாண் பணிகளை மேற்கொள்ள வந்து பார்த்தபோது அங்கு வாழை மரங்கள், நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டு யானை சேதப்படுத்திய விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.