தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்னாகரம் பிடிஓ ஆபிஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என பேசினார். நல்லம்பள்ளி பிடிஓ ஆபிஸ் முன் வட்டார செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இண்டூர் வட்டார செயலாளர் மாதையன் முன்னிலை வகித்தார். ஏஐடியூசி மாநில துணை தலைவர் கே.மணி, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தர்மபுரி பிடிஓ ஆபிஸ் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் சிவன் தலைமை வகித்தார். விதொச மாவட்ட செயலாளர் தேவராசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் நிர்வாகிகள் மாதையன், முருகேசன், சுப்ரமணி, சாமிநாதன், முனுசாமி, சிவன், புகழேந்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலி ரூ.700 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.