திருவண்ணாமலை, மே 30: திருவண்ணாமலை அருகே விவசாய கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழக முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பாபு மகன் சந்தோஷ்குமார்(14). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள இவர், வரும் 2ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கு செல்ல இருந்தார். கோடை விடுமுறை இன்னும் 2 நாட்களில் முடியும் நிலையில், தனது நண்பர்களுடன் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயுள்ள ஒரு விவசாய கிணற்றில் நீச்சல் பழக முயன்றுள்ளார்.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால், கிணறு முழுமையாக நிரம்பியிருந்தது. ஆர்வ மிகுதியில் கிணற்றுக்குள் குதித்து நீச்சல் பழக முயன்ற சந்தோஷ்குமார், திடீரென நீரில் மூழ்கினார். அவருடன் வந்த நண்பர்களுக்கும் முழுமையாக நீச்சல் தெரியாததால், சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. எனவே, அலறியடித்து கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்றவர்களை உதவிக்கு அழைத்தனர். ஆனாலும், அதற்குள் முழுமையாக நீருக்குள் சந்தோஷ்குமார் மூழ்கிவிட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி, சிறுவன் சந்தோஷ்குமாரை சடலமாக மீட்டனர். அப்போது, அங்கு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.