வந்தவாசி, ஜூன் 30: வந்தவாசி அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 23 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(45), விவசாயி. இவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அறையில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதிலிருந்த இருபத்து இரண்டரை சவரன் நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
நேற்று காலை ஐயப்பன் குடும்பத்தினர் கண் விழித்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் உள்ள பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதும், அதில் இருந்த நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், பழைய பேக் ஒன்றில் 5 சவரன் நகைகள் இருந்தன. அதனை கவனிக்காமல் மர்ம ஆசாமிகள் வீசி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த நகைகள் தப்பின. இதுகுறித்து ஐயப்பன் தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வந்தவாசி டிஎஸ்பி தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர் விஜயகுமார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்புத்துலக்கினர். சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து பின்னர் அருகருகே உள்ள வீடுகளின் உள்ளே புகுந்து வெளியே வந்த மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்காமல் ஓரிடத்தில் நின்றது.
இந்த கொள்ளயைில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளுக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்கு பதிந்து கும்பலை தேடிவருகின்றனர்.