குடியாத்தம், ஜூன் 4: குடியாத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(38) விவசாயி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். தரிசனம் முடிந்து நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேஷ் உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறை திறக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
விவசாயி வீட்டில் 20 சவரன் நகை, பணம் திருட்டு குடியாத்தம் அருகே துணிகரம்
0