காரிமங்கலம், ஜூன் 7: காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ₹1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகரள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி அருண். இவரது மனைவி குந்தியம்மாள். கிராமத்தில் இன்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், கோயிலில் நடைபெற்று வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அருண் தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டார். மாலை 5மணியளவில் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காரிமங்கலம் போலீசார்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.