செய்யாறு, ஜூலை 17: செய்யாறு அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை பீர்பாட்டிலால் தாக்கி கொன்ற 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(44), விவசாயி. இவர் கடந்த 12ம் தேதி அங்குள்ள டாஸ்மாக் அருகே கடையில் நண்பர் குமாருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது, பக்கத்து இருக்கையில் மது குடித்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒயரிங் வேலை பார்க்கும் மைக்கேல்ராஜ்(32), அவரது நண்பர் பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல், மைக்கேல் ராஜின் உறவினர்களான ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் எத்திராஜ்(23), ஆசைத்தம்பி மகன் சந்திரன் என்ற காண்டீபன்(25) ஆகிய 4 பேரும் மது அருந்தினர்.
அப்போது, விநாயக மூர்த்திக்கும் மைக்கேல் ராஜிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மைக்கேல் ராஜ், விநாயகமூர்த்தியின் முகத்தில் பீர்பாட்டிலால் தாக்கி உள்ளார். மேலும், எத்திராஜ், சந்திரன் என்ற காண்டீபன், மாணிக்கவேல் ஆகிய மூவரும் சேர்ந்து விநாயகமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அன்றிரவு மாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மோரணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மைக்கேல்ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை விநாயகமூர்த்தி இறந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த எத்திராஜ், சந்திரன் என்ற காண்டீபன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேலுவை போலீசார் தேடி வருகின்றனர். கொலையான விநாயகமூர்த்திக்கு ரேவதி என்ற மனைவி, 12 வயது மற்றும் 8 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.